வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பா.ம.க. பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில் குற்றவாளியும், தாக்குதலுக்கு உள்ளான உதவி ஆய்வாளரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (43). பா.ம.க. பிரமுகரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. பூவரசன் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை மற்றும் நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டல் உள்ளிட்ட 13 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் பலமுறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வெளியூருக்குச் சென்றிருந்த ஞானவேல் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். நேற்று மாலை அவர் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்தபோது அங்கு வந்த பூவரசன், தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் ஞானவேலை நோக்கிச் சுட்டுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற ஓட்டல் தொழிலாளியான ரகு (40) என்பவரையும் பூவரசன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
Advertisement
அங்கு ஞானவேலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ரகுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார், தப்பிச் செல்ல முயன்ற பூவரசனைப் பிடித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, பூவரசன் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்வதற்காக, அவற்றை மறைத்து வைத்திருந்த இடத்துக்கு அவரை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்த பூவரசன், உதவி ஆய்வாளர் ராஜாவைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் பூவரசனைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் ராஜா மற்றும் பூவரசன் ஆகிய இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பா.ம.க. பிரமுகர் கொலை மற்றும் குற்றவாளியைப் போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.