விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர், தென்பெண்ணை ஆற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் சரண்யா. இவர் இன்று (வெள்ளிக்கிழமை) அரகண்டநல்லூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு சரண்யாவின் உடலை மீட்ட அவர்கள், பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
இந்தச் சம்பவம் தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரண்யா இந்த முடிவை எடுத்ததற்கு பணிச்சுமை காரணமாக இருந்ததா அல்லது குடும்பப் பிரச்சினைகள் ஏதேனும் இருந்ததா என்ற கோணங்களில் அவரது குடும்பத்தினர் மற்றும் சக மருத்துவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் காவல்துறையின் முழுமையான விசாரணைக்குப் பின்னரே அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.