திருப்பூர் அருகே சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் விசைத்தறி தொழிலாளியை ஜீப் ஏற்றி கொலை செய்த வழக்கில், பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருகம்பாளையம் லட்சுமிகார்டன் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (57). விசைத்தறி தொழிலாளியான இவர் வசித்து வந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது அந்த பகுதியை சேர்ந்த 2 பேர், சாலை அமைக்கப்படவுள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 4-7-2025 அன்று பழனிசாமி, சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியை (60) சந்தித்தார். சாலை அமைப்பதில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ள இடத்தை பேரூராட்சி நிர்வாகமே விலைக்கு வாங்கிய பின்னர், அங்கு தார் சாலை அமைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று பேரூராட்சி தலைவர் பழனிசாமியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில், கடந்த 10-9-2025 அன்று கருகம்பாளையம் அரசு பள்ளி அருகே பழனிசாமி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஜீப்பில் வந்த பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி, அவரது ஸ்கூட்டர் மீது மோதினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசாமியின் மகன் சுகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் மங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நேற்று நடைபெற்ற விசாரணையின் முடிவில், கொலை குற்றத்திற்காக விநாயகா பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.