வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடலுக்குச் சென்றுள்ள அனைத்து வகையான மீன்பிடிப் படகுகளும் நவம்பர் 12-ஆம் தேதி இரவுக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நவம்பர் 13-ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். தொடர்ந்து அது வலுப்பெறவும் வாய்ப்புள்ளது. இதனை முன்னிட்டு, மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கிழக்குக் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ள அனைத்து படகுகளும் நவம்பர் 12-ஆம் தேதி இரவுக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும்.
Advertisement
குறிப்பாக, தினசரி கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் நாட்டுப்படகுகள் உட்பட அனைத்து வகையான மீன்பிடிப் படகுகளும் தங்களது வழக்கமான மீன் இறங்குதளங்களைச் சென்றடைந்து பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 13-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை மீன்பிடிப் படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் (Fishing Tokens) வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மீனவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.