வங்கதேச பிரதமரின் இந்திய பயணம் நினைவில் நிற்கும் வகையில் இருக்கவேண்டும்: பிரதமர் மோடி விருப்பம்
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா வருகை தரும்போது, அந்த பயணம் அவருக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக இந்திய தூதர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்திய தூதரகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தூதர் தினேஷ் திரிவேதி பங்கேற்று பேசினார். அப்போது, இந்தியா-வங்கதேசம் இடையே சமீப காலமாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறினார்.இரு நாடுகளும் கடந்த கால பிரச்சினைகளை கடந்து, எதிர்காலத்தை நோக்கி ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா-வங்கதேச உறவை மேலும் வலுப்படுத்த பரஸ்பர நம்பிக்கை முக்கியம் என்றும், வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகள் வாயிலாக இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.வங்கதேச மக்களுக்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் தினேஷ் திரிவேதி தெரிவித்தார்.செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தாரிக் ரஹ்மானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.