ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆதவ் அர்ஜுனா வழக்கு: மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜான் பிரிட்டோ என்பவருடன் தன்னை தொடர்புபடுத்தி அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டதாகக் கூறி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை ஐகோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.தனது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவதூறு பரப்பியதற்காக மு.க.ஸ்டாலினும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.மேலும், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜான் பிரிட்டோவுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், தன்னை அவருடன் இணைத்து தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த மானநஷ்ட வழக்கு தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், இந்த வழக்கில் தங்களது பதிலை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.