ரஷியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் விளாடிமிர் புதினின் ஆளும் ஐக்கிய ரஷிய கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. ரஷியாவில் கடந்த 18-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளில், தபால் வாக்குகள் உள்ளிட்ட சுமார் 95 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. மத்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட தகவலின்படி, ஐக்கிய ரஷிய கட்சி 57.83 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற கீழ் அவை தேர்தலில் அந்த கட்சி 49.8 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 450 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில், புதினின் கட்சி 355 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை பெற்றுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. அதற்கு உக்ரைனும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் 5-வது ஆண்டாக நீடித்து வருகிறது.
Advertisement
இந்த சூழலில், புதினின் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் என முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த தேர்தல் அவரது ஆட்சிக்கு ஒரு சவாலாக அமையும் என அரசியல் நிபுணர்கள் கருதினர். இதற்கிடையே, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், ரஷியா மீது உக்ரைன் நேற்று அதிகாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். அவற்றில் 100-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மாஸ்கோவை நோக்கி ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டதாக மேயர் ஆண்ட்ரி வோரோபியோவ் தெரிவித்தார். இந்த தாக்குதலில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 74 வயது முதியவரும், 44 வயது பெண்ணும் அடங்குவர். இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் தரப்பில் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.