சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே அது 7 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 6 நாட்களாக இதே அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நீரின் தேவை அதிகரித்ததால், நேற்று மாலை 6 மணியளவில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது டெல்டா பாசனத்துக்கான நீர்த்தேவை மேலும் உயர்ந்துள்ள நிலையில், இன்று காலை 6 மணி முதல் நீர்திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.39 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 709 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் சுமார் 55.35 டி.எம்.சி. அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.