மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க தமிழக அரசுக்கு துணை நிற்போம்: காங்கிரஸ் தீர்மானம்
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளையொட்டி, சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுக்க தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.காவிரி நீர் தொடர்பாக 2007-ம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பும், 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பும் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் நலனை பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேகதாதுவில் ரூ.9,000 கோடி செலவில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டு வருவதாகவும், இதன் மூலம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் பாதிக்கப்படும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், தமிழக மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, காவிரி நீருக்கான தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாது அணை கட்டுவதை தடுக்கவும் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் சாதனைகள் குறித்து தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி அளித்த பல்வேறு வாக்குறுதிகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகும் நிறைவேற்றப்படவில்லை என்று பா.ஜ.க. அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.மோடி ஆட்சியில் ஏழை மற்றும் எளிய மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில தொழிலதிபர்கள் பயனடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வருமானம் மற்றும் சொத்து பகிர்வில் ஏற்பட்டுள்ள சமத்துவமின்மை குறித்தும் காங்கிரஸ் தனது கவலையை பதிவு செய்துள்ளது.மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் அதிகரிக்கும் முயற்சி தென் மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 543 மக்களவைத் தொகுதிகளையே தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்றும், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு மாறாக, விவசாயிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கும் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியவில்லை என்றும், செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் வங்கிகளுக்கே திரும்ப வந்ததாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் குறைந்ததாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவகாரத்திலும் பா.ஜ.க.வை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 2018 முதல் 2024 வரை கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய ரூ.16,518 கோடி நன்கொடையில், பா.ஜ.க. ரூ.8,252 கோடியை பெற்றதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் 2024 பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியதையும் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக குற்றம்சாட்டியதுடன், இதற்கு எதிராக போராடி வரும் ராகுல்காந்தியை பொதுக்குழு பாராட்டியுள்ளது.மாநில உரிமைகள் தொடர்பாகவும் தீர்மானத்தில் பல்வேறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி., புதிய கல்விக் கொள்கை, திட்டக்குழு கலைப்பு, மாநில மொழிகளுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் மாநிலங்களின் அதிகாரங்களை பாதிப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சமக்ரா சிக்ஷா அபியான் திட்ட நிதியான ரூ.2,952 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்றும், இதனால் அந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நிதிச்சுமையை தமிழக அரசே ஏற்று வருவதாகவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 2017 முதல் 2025 வரை சமஸ்கிருதத்துக்கு ரூ.2,532 கோடியும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய செம்மொழிகளுக்கு சேர்த்து ரூ.147.56 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.கடந்த 12 ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர்கள் வெள்ளம் மற்றும் வறட்சி நிவாரணமாக மத்திய அரசிடம் கேட்ட ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 500 கோடியில், ரூ.5,778 கோடி மட்டுமே வழங்கப்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் பொதுக்குழு தீர்மானம் வரவேற்றுள்ளது. திராவிட இயக்கங்கள் அல்லாத ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ள நிலையில், அந்த ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது காங்கிரஸைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் ஆட்சியில் இடம்பெற்றுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.2029 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் கட்சியினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பொதுக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. ராகுல்காந்தியின் தலைமையையும் அவரது கருத்துகளையும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்று மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துவமான அரசியலை முன்னெடுத்து, தனது கொள்கைகளையும் கருத்தியலையும் மக்கள் மத்தியில் வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் மற்றும் ராஜீவ்காந்தி ஆகியோரின் கனவை நனவாக்கும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைய கட்சியினர் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் பொதுக்குழு உறுதியேற்றுள்ளது.