முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: இன்று முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) நடத்தும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், இன்று (ஆகஸ்ட் 6) முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவுகளில் ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் மீது பொதுமக்களிடையே ஆர்வத்தை அதிகரிப்பதோடு, திறமையான வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அங்கீகாரமும் பரிசுகளும் வழங்குவதே இந்தப் போட்டிகளின் முக்கிய நோக்கமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தாண்டு முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகள், செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் மாவட்ட அளவில் தொடங்கப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 31 வரை tncmtrophy.sdat.in இணையதளத்தில் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நடைபெற்ற 38 விளையாட்டுகளுடன் சேர்த்து, இந்த ஆண்டு வில்வித்தை, வுஷூ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், கயாக்யிங் மற்றும் கேனோயிங் ஆகிய புதிய விளையாட்டுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நடைபெற உள்ளன.இந்தப் போட்டிகளில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் (01.01.2008 அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்), இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் (01.07.2001 அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்), 15 முதல் 35 வயதுக்குட்பட்ட பொதுப் பிரிவினர், அனைத்து வயதினரும் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பரிசுத் தொகையாக, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தனிநபர் போட்டிகளில் முதல் இடத்திற்கு ரூ.3,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.2,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.1,000 வழங்கப்படும்.