மாணவர்களுக்கு இலவச நவீன சைக்கிள்கள்: ஹீரோ நிறுவனத்தை தேர்வு செய்தது தமிழக அரசு
தமிழக அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஹெல்மெட் மற்றும் குடிநீர் பாட்டில் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய நவீன சைக்கிள்களை இலவசமாக வழங்கும் திட்டத்திற்காக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட கொள்முதல் குழு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் 9 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், மாணவர்களுக்கான சைக்கிளை ரூ.5,260-க்கும், மாணவிகளுக்கான சைக்கிளை ரூ.5,130-க்கும் வழங்க முன்வந்துள்ளது. தொடக்கத்தில் மாணவர்களுக்கான சைக்கிளுக்கு ரூ.7,235-ம், மாணவிகளுக்கான சைக்கிளுக்கு ரூ.7,476-ம் என அந்நிறுவனம் விலை குறிப்பிட்டிருந்தது.