மதுராந்தகம், தாராபுரம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு: சட்டசபையில் தவெக பலம் 109 ஆக உயர்வு!
சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடைபெற்ற நிகழ்வில், சபாநாயகர் முன்னிலையில் இருவரும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்றது. கட்சி சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்தது. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். இருவரும் பதவியேற்ற நிகழ்வின்போது அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ், அருண்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் முந்தைய பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். பின்னர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்த இருவரும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.