சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடைபெற்ற நிகழ்வில், சபாநாயகர் முன்னிலையில் இருவரும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்றது. கட்சி சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்தது. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். இருவரும் பதவியேற்ற நிகழ்வின்போது அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ், அருண்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் முந்தைய பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். பின்னர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்த இருவரும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். சட்டசபையில் தவெகவின் பலம் 109 ஆக அதிகரிப்புதமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர் இடங்கள் உள்ளன. சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா காரணமாக மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 7 தொகுதிகள் காலியாக இருந்தன. இதனால் சட்டசபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 227 ஆக இருந்தது. அப்போது சபாநாயகர் உட்பட தவெகவுக்கு 107 உறுப்பினர்கள் இருந்தனர். திமுகவுக்கு 59, அதிமுகவுக்கு 41, காங்கிரஸுக்கு 5, பாமகவுக்கு 4 உறுப்பினர்கள் இருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 உறுப்பினர்களும், பாஜக, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு உறுப்பினரும் உள்ளனர். இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக சட்டசபையில் அக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.