முதலிடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து: தீர்மானத்திற்கு ஆதரித்த அனைவருக்கும் நன்றி - முதல்-அமைச்சர் விஜய்
தமிழ்நாட்டில் அரசு துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.தீர்மானத்தை முன்வைத்து பேசிய அவர், தமிழ்நாட்டின் அடையாளத்திலும் தமிழர்களின் உணர்விலும் தமிழ் மொழிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல என்றும், அது தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் இணைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிகழ்ச்சிகளில் முன்னுரிமை வழங்குவது மாநிலத்தின் உரிமை எனக் கூறிய முதல்-அமைச்சர் விஜய், அதன் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு எந்த சமரசமும் செய்யாது என்றார். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்றும், இதனை அரசியல் விவாதமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.திமுக சார்பில் பேசிய எம்.எல்.ஏ. கோவி.செழியன், அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வேண்டும் என முதலில் அரசாணை பிறப்பித்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் என்றும், 2021 டிசம்பர் 17-ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கி அரசாணையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டதாகவும் அவர் கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியவரின் பெயரில் செயல்படும் பல்கலைக்கழகத்திலேயே அது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட சூழலை மாற்றுவதற்காக இதனை சட்டமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.அதிமுக சார்பிலும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு பாடல் மட்டுமல்ல; அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்று குறிப்பிட்டார்.