சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிதாகத் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு ஒப்புதல் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் நிலவும் மின்தடைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், பேட்டரி மூலம் மின்சாரத்தைச் சேமிக்கும் திட்டங்களை ஊக்குவிப்பது தொடர்பான முடிவுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அரசின் திட்டங்களைச் செயல்படுத்துதல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், ஒவ்வொரு துறைக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுதல் உள்ளிட்ட விவகாரங்களும் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
Advertisement
இதுதவிர, சட்டம்-ஒழுங்கு நிலவரம், வருவாய்த் துறை மூலம் ஏழை மக்களுக்குப் பட்டா வழங்கும் நடவடிக்கைகள், சமூக நீதி கணக்கெடுப்பு ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தின்போது, அமைச்சர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று முக்கிய அறிவுறுத்தல்களை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார். அதன்படி, மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அரசின் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் அறிந்து அமைச்சர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அமைச்சர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.