சென்னையில் பணியாற்றி வரும் 24 வயதான பெண் போலீஸ் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய போலீஸ்காரரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக அவர் அளித்த உறுதியை நம்பி அவருடன் வாழ்ந்த நிலையில், தற்போது திருமணம் செய்ய மறுத்ததாகக் கூறி அந்த போலீஸ்காரர் மீது எழும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண் போலீஸ் பட்டதாரி ஆவார். சென்னை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் அவர், தேனாம்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டிருந்தார். புதுப்பேட்டையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். அப்போது ஆயுதப்படையில் தன்னுடன் பணியாற்றிய போலீஸ்காரர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, இருவரும் சுமார் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக அந்த போலீஸ்காரர் கூறியதால், அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக பெண் போலீஸ் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அவரையே வருங்கால கணவராக நினைத்ததால், அவரது விருப்பத்திற்கு இணங்கி வாழ்ந்ததாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே இருவரது காதலுக்கும் குடும்பத்தினரின் சம்மதம் கிடைத்ததாக தெரிகிறது. குறிப்பாக அந்த போலீஸ்காரரின் பெற்றோர் காதலைஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
Advertisement
இந்த சூழலில், போலீஸ்காரருடன் ஒன்றாக வசித்து வந்த நிலையில் பெண் போலீஸ் கர்ப்பமானதாக தெரிகிறது. பின்னர் அந்த கருவை கலைக்க வேண்டும் எனக் கூறி, அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், அதன் மூலம் கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர், திடீரென பெண் போலீஸை திருமணம் செய்து கொள்ள போலீஸ்காரர் மறுத்ததாக தெரிகிறது. மேலும், அவருடனான தொடர்பையும் துண்டித்துள்ளார். விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு சென்ற அவர், அங்கு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ், தனது வாழ்க்கையை சீரழித்ததாகக் கூறப்படும் போலீஸ்காரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று எழும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் மனு அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட போலீஸ்காரரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதேபோன்ற மற்றொரு பெண் போலீசின் புகார் தொடர்பாக விசாகா குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகாரும் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.