மதுரை மாவட்டம் மேலூரில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தின் செல்போன் செயலி மூலம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், மேலூரை சேர்ந்த மேலும் ஒரு பெண் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மேலூரில் எப்.கியூ.எல். என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தின் செயலி மூலம் ஆன்லைனில் முதலீடு செய்தால், 2 மாதங்களில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாகும் என பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. முதலீடுகளைப் பெறுவதற்காக பல்வேறு பகுதிகளில் முகவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த முகவர்கள் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம மக்களை அணுகி, நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு நம்பிக்கையூட்டும் வகையில் பேசியுள்ளனர். சில முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகை இரட்டிப்பாக கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில், தனியார் நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால் முதலீடு செய்தவர்கள், முகவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மேலூரில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வழக்கு மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மேலூர் அருகே கட்டையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினி ஆகியோர் கடந்த 7-ந்தேதி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், சமூக வலைதளங்கள் வாயிலாக கிராம மக்களிடம் முதலீடு குறித்து பேசி அவர்களை நம்ப வைத்து பணம் செலுத்தச் செய்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Advertisement
மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் மற்றும் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட செல்போன்களின் ஐ.பி. முகவரிகளை பெற சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சைபர் கிரைம் போலீசார் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்கள் கிடைத்த பிறகு, மோசடியின் பின்னணியில் தொடர்புடையவர்கள் யார் என்பதும், எவ்வளவு தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை மதுரையில் 3 ஆயிரம் புகார்களும், திண்டுக்கல்லில் 4 ஆயிரம் புகார்களும், விருதுநகரில் 30 புகார்களும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீசாரின் மனைவிகளும் இந்த மோசடியில் பணத்தை இழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், யார் யார் எவ்வளவு தொகையை இழந்துள்ளனர் என்பதை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது. கோடிக்கணக்கில் பண மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், ரஞ்சித் மற்றும் அவரது மனைவியிடம் விரிவான விசாரணை நடத்துவதற்காக அவர்களை போலீஸ் காவலில் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ரஞ்சித்தின் உறவினரான மேலூர் கட்டையம்பட்டியைச் சேர்ந்த ரேவதி (35) என்பவர் இந்த வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ரேவதியிடம் விசாரணை நடத்துவதன் மூலம் வழக்கு தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.