பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பா.ஜ.க. சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடி ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். புதிய இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருபவர் என்றும், 145 கோடி இந்தியர்களின் வாழ்வில் மகிழ்ச்சி, வளம், பாதுகாப்பு மற்றும் பெருமையை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 'தேசம் முதலில், பொதுமக்களின் நலன்' என்ற அடிப்படையில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் பணிகள் உந்துதலாக இருப்பதாகவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
Advertisement
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க வாழ்த்துவதாக கார்கே தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.