சென்னைக்கு வடக்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பழவேற்காடு ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரியாகும். தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியுள்ள இந்த ஏரியை, இரு மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களும் தங்களது வாழ்வாதாரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர். ஏரியில் அதிகளவில் வண்டல் மண் தேங்குவதுடன், கோடைக்காலங்களில் நீர்மட்டமும் குறைவதால் ஆழம் குறைந்த பகுதிகளிலேயே மீன்பிடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று இரு மாநில அதிகாரிகள் பங்கேற்ற கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 மீனவ கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய எல்லைக் குறியீடுகளுக்குப் பதிலாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, இரு மாநிலங்களுக்கு இடையேயான மீன்பிடி எல்லைகளைத் தெளிவாகக் கண்காணிக்க நிரந்தர ஜி.பி.எஸ். அடிப்படையிலான கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த இருதரப்பு மீனவர்களும் ஒப்புதல் அளித்தனர். இதற்காக ஏரியில் இயக்கப்படும் இயந்திரப் படகுகள் மற்றும் பாரம்பரியப் படகுகளில் தானியங்கி ஜி.பி.எஸ். டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட உள்ளன. தேசியக் கடற்கரை ஆராய்ச்சி மையம் (NCCR) உள்ளிட்ட அமைப்புகளின் உதவியுடன் துல்லியமான டிஜிட்டல் கடல்சார் எல்லைகள் வரையறுக்கப்பட உள்ளன.
Advertisement
எல்லைக் கோட்டை நெருங்கும் அல்லது அதைத் தாண்டும் படகுகளுக்கு உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையிலும், அதுகுறித்த தகவல் திருவள்ளூர் மற்றும் திருப்பதியில் உள்ள கடலோர காவல் கட்டுப்பாட்டு அறைகளுக்கு சென்றடையும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், படகுகளில் பொருத்தப்படும் டிரான்ஸ்பாண்டர்களை திட்டமிட்டு செயலிழக்கச் செய்வது அல்லது அவற்றில் முறைகேடு செய்வது குற்றமாகக் கருதப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ்நாடு கடல்சார் மீன்வள ஒழுங்குமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்த நடவடிக்கைகளுக்கு ஏற்ப இந்த தொழில்நுட்ப நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இரு மாநில மீனவர்களுக்கு இடையேயான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தின் சின்ன மங்கோடு கிராமத்தில் ஏற்பட்ட மோதலின்போது வீடுகள், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவமும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மீனவர்கள் மீது தற்போது 199 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவற்றை இரு மாநில அரசுகளும் பரஸ்பரம் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.