பழனி முருகன் கோவிலுக்கு நடிகர் தனுஷ் இன்று அதிகாலை குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். மலைக்கோவிலில் நடைபெற்ற பூஜையிலும் அவர் பங்கேற்றார். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர். முக்கிய விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் பழனிக்கு வருவது வழக்கம். அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்களும் அவ்வப்போது கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், நடிகராக மட்டுமின்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அவர், தற்போது 'ஓம்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே, தனுஷின் 56-வது திரைப்படத்துக்கான படப்பிடிப்பு பூஜை நேற்று நடைபெற்றது. தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன், காளிவெங்கட், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Advertisement
சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த நிலையில், தனுஷ் இன்று அதிகாலை தனது மகன்கள் யாத்ரா, லிங்கா, அப்பா, அம்மா, அக்கா உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனிக்கு வந்தார். காலை 6 மணியளவில் படிப்பாதை வழியாக குடும்பத்தினருடன் மலைக்கோவிலுக்குச் சென்றார். அங்கு நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்ட தனுஷ், பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்தார். சிறப்பு வழிபாடுகளை முடித்த பிறகு சிறிது நேரம் கோவிலில் இருந்த அவர், பின்னர் ரோப் கார் மூலம் மலைக்கோவிலில் இருந்து அடிவாரத்துக்கு வந்தார். தனுஷின் வருகையால் பழனி மலைக்கோவில் மற்றும் அடிவாரப் பகுதிகளில் பக்தர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டது. மலைக்கோவில் பகுதியில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால், அடிவாரத்துக்கு வந்த தனுஷை கண்ட ஏராளமான பக்தர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தனர். சாமி தரிசனம் முடித்த பின்னர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.