பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும் - அன்புமணி
தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை தமிழக அரசு 4 மடங்கு முதல் 8 மடங்கு வரை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உதவித்தொகை உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவி வழங்கப்படாதது சமூக அநீதியாகும். பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அரசு கலைக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கட்டணச் சுமையை குறைக்கும் நோக்கில் கல்விக் கட்டண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை 2011-ம் ஆண்டுக்குப் பிறகு உயர்த்தப்படவில்லை. தற்போது பி.எஸ்சி., பி.காம். மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவி ரூ.2,850-ல் இருந்து 295 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.ஏ. மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.1,350-ல் இருந்தும், எம்.எஸ்சி., எம்.காம். மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2,850-ல் இருந்தும் ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பி.ஏ. மாணவர்களுக்கான ரூ.1,350 உதவித்தொகை 733 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.11,250 ஆக வழங்கப்பட உள்ளது. பி.பி.ஏ. மாணவர்களுக்கும் இதே தொகை வழங்கப்படும். மேலும் 11 இளநிலைப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.11,250-ம், 10 முதுநிலைப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000-ம் கல்விக் கட்டண உதவியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உதவித்தொகை 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்ததைக் கருத்தில் கொண்டால், தற்போதைய உயர்வு நியாயமானதும் அவசியமானதுமாகும். ஆனால், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய மாணவர்களுக்கு இதுபோன்ற கல்விக் கட்டண உதவி வழங்கப்படுவதில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. மேலும், அரசு கல்லூரிகளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவதால், அங்கு கல்விக் கட்டணம் பெரும் சுமையாக இருப்பதில்லை. மாறாக, தனியார் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.