தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை தமிழக அரசு 4 மடங்கு முதல் 8 மடங்கு வரை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உதவித்தொகை உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவி வழங்கப்படாதது சமூக அநீதியாகும். பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அரசு கலைக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கட்டணச் சுமையை குறைக்கும் நோக்கில் கல்விக் கட்டண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை 2011-ம் ஆண்டுக்குப் பிறகு உயர்த்தப்படவில்லை. தற்போது பி.எஸ்சி., பி.காம். மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவி ரூ.2,850-ல் இருந்து 295 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.ஏ. மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.1,350-ல் இருந்தும், எம்.எஸ்சி., எம்.காம். மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2,850-ல் இருந்தும் ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பி.ஏ. மாணவர்களுக்கான ரூ.1,350 உதவித்தொகை 733 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.11,250 ஆக வழங்கப்பட உள்ளது. பி.பி.ஏ. மாணவர்களுக்கும் இதே தொகை வழங்கப்படும். மேலும் 11 இளநிலைப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.11,250-ம், 10 முதுநிலைப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000-ம் கல்விக் கட்டண உதவியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உதவித்தொகை 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்ததைக் கருத்தில் கொண்டால், தற்போதைய உயர்வு நியாயமானதும் அவசியமானதுமாகும். ஆனால், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய மாணவர்களுக்கு இதுபோன்ற கல்விக் கட்டண உதவி வழங்கப்படுவதில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. மேலும், அரசு கல்லூரிகளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவதால், அங்கு கல்விக் கட்டணம் பெரும் சுமையாக இருப்பதில்லை. மாறாக, தனியார் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கும் கல்விக் கட்டண உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி கிடைப்பதில் குறைபாடுகள் இருப்பதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 8,083 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுக் கல்லூரிகளில் கல்வித் தரம் குறைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இடம் கிடைத்தாலும் பல மாணவர்கள் தனியார் கலைக் கல்லூரிகளைத் தேர்வு செய்யும் நிலை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணமாக, 2022-23ஆம் ஆண்டில் 170 அரசு கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டு படிப்புகளில் 1,08,748 மாணவர்கள் சேர்ந்தனர். கடந்த ஆண்டில் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்தபோதிலும், மாணவர் சேர்க்கை 96 ஆயிரமாகக் குறைந்தது. அதேநேரத்தில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 2023-24ஆம் ஆண்டில் 1,94,306 ஆக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் 2.60 லட்சத்தைக் கடந்துள்ளது. தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பயின்று வரும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லாதவர்களாக உள்ளனர். பல மாணவர்களின் பெற்றோர் கடன் பெற்றே கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. இதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் காரணமல்ல என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். அரசுக் கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, தேவையான உதவிப் பேராசிரியர்களை நியமித்து தரமான கல்வியை தமிழக அரசு வழங்கியிருந்தால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, தனியார் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணச் சுமையை அரசே ஏற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படுவது போன்று, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூக மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 2026-27ஆம் கல்வியாண்டு முதலே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.