பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கு முதல்வரின் ஒப்புதல் கட்டாயம்: புதிய நடைமுறையை அறிவித்த தமிழக அரசு
பதவி உயர்வு, நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட முக்கிய நிர்வாக நடவடிக்கைகளுக்கு இனி முதல்வரின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-ன் விதி 35(4)ன் கீழ், 2022 முதல் 2025 வரை வெளியிடப்பட்ட அனைத்து நிலை ஆணைகளும், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலை ஆணை எண் 7-உம் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு பதிலாக பதவி உயர்வு, நியமனம், பணியிட மாற்றம், நிலம் கையகப்படுத்தல் மற்றும் நில மாற்றம் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளுக்கான புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.இதுகுறித்து தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்ட உத்தரவின்படி, துறைத் தலைவர்கள், துறைத் தலைவர்களுக்கு அடுத்த நிலை அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் தற்காலிக மற்றும் நிரந்தர பதவி உயர்வு பட்டியல்கள் முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டும். மற்ற மாநிலப் பணியாளர்களின் பதவி உயர்வு பட்டியல்களில் சம்பந்தப்பட்ட துறை, மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் நிதித்துறை இடையே கருத்து வேறுபாடு இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதல் மட்டும் போதுமானதாக இருக்கும். கருத்து வேறுபாடு ஏற்பட்டால், கோப்புகள் மனிதவள மேலாண்மை அமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும். மூப்பு அடிப்படையை மீறி வழங்கப்படும் பதவி உயர்வுகள் தொடர்பான கோப்புகள், தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையுடன் முதல்வரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அகில இந்தியப் பணியாளர் அதிகாரிகள், கூடுதல் செயலாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் பதிவாளர்கள் மற்றும் கூடுதல் இயக்குநர்கள் ஆகியோரின் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பான அனைத்து கோப்புகளும் முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்ட அலுவலர்கள் நியமனங்களில், அரசு தலைமை வழக்கறிஞர், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் மற்றும் அரசு பிளீடர் உள்ளிட்ட உயர்நிலைப் பதவிகளுக்கான நியமனங்களுக்கு முதல்வரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உயர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களுக்கான பிற சட்ட அலுவலர்களின் நியமனங்களை எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் முடிவு செய்வார்.நீர்வளத் துறையில் கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களின் பணியிட மாற்றம் தொடர்பான கோப்புகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பரிசீலிப்பார்.