நடிகர் பகத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ள “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (செப்டம்பர் 22) காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதையொட்டி, டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசில், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர். குறிப்பாக, “புஷ்பா” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடமும் கவனம் பெற்றார். இந்நிலையில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகியுள்ள “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” படத்தில் பகத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷஷாங்க் யெலெட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். மாயாஜாலம் மற்றும் பேன்டசி அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில் பகத் பாசில் மேஜிக் கலைஞராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகத் பாசில் மற்றும் சாரா இணைந்து மேற்கொள்ளும் சுவாரஸ்யமான பயணத்தை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும், பாலிவுட் நடிகர் சவுரப் சக்தேவாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே “புஷ்பா” திரைப்படத்தில் பகத் பாசிலுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார். தெலுங்கில் உருவாகியுள்ள “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. முதலில் செப்டம்பர் 11-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது. தற்போது அக்டோபர் 2-ம் தேதி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 22-ம் தேதி காலை 9 மணிக்கு டிரெய்லர் வெளியாகிறது. இதனுடன், பிரசாத்ஸ் சினிமாஸில் காலை 9 மணி முதல் சிறப்பு வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.