Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

நெல்லையில் பட்டப்பகலில் அண்ணன்-தம்பி குத்திக்கொலை: சென்னை தொழிலாளி வெறிச்செயல்

நெல்லையில் பட்டப்பகலில் அண்ணன்-தம்பி குத்திக்கொலை: சென்னை தொழிலாளி வெறிச்செயல்

நெல்லை டவுன் அருகே மணிப்புரம் பகுதியில் பட்டப்பகலில் அண்ணன்-தம்பி இருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சென்னையில் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வந்த ஒருவர் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் டால்டன் (76). இவருக்கு நிக்கோலஸ் ராஜரத்தினம் (78) உள்ளிட்ட 3 சகோதரர்கள் உள்ளனர். குவைத்தில் பணியாற்றிய இவர்கள் அனைவரும் தற்போது சொந்த ஊருக்கு திரும்பி, மணிப்புரம் பகுதியில் ஒரே காம்பவுண்டுக்குள் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். டால்டன் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். டால்டனின் வீட்டுக்கு அருகே மணிப்புரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவருக்குச் சொந்தமான குடும்பக் கோவில் உள்ளது. அந்தக் கோவில் அருகே காரை நிறுத்துவது தொடர்பாக டால்டனுக்கும் செந்தில்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. செந்தில்குமார் சென்னையில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த செந்தில்குமாருக்கும், டால்டனின் மகன் நரேனுக்கும் இன்று காலை கோவில் அருகே கார் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த தகராறு கைகலப்பாக மாறியது. இதனைப் பார்த்த நரேனின் பெரியப்பா நிக்கோலஸ் ராஜரத்தினம், இருவரையும் விலக்க முயன்றுள்ளார். அப்போது செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிக்கோலஸ் ராஜரத்தினத்தை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

Advertisement
சத்தம் கேட்டு டால்டன் அங்கு வந்தபோது, செந்தில்குமார் அவரையும் கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற நரேனுக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. மேலும் டால்டனை தாக்கியபோது செந்தில்குமாரின் கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த டால்டன் மற்றும் நிக்கோலஸ் ராஜரத்தினத்தை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட டால்டனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிக்கோலஸ் ராஜரத்தினத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதற்கிடையே காயமடைந்த நரேன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரட்டை கொலை குறித்து தகவல் கிடைத்ததும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சேகர் சஞ்சய் தேஷ்முக், மாநகர கிழக்கு துணை கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் செந்தில் தங்கதுரை உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதமே இரட்டைக் கொலைக்கு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளையும் சேகரித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு