தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் நாளை (திங்கட்கிழமை) மதுரை செல்கிறார். அங்கு த.வெ.க.வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்கத்தில் மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நாளை புறப்படும் விஜய், காலை 11.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் காரில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் திட்டத்தை தொடங்கி வைக்கும் அவர், தொடர்ந்து மகப்பேறு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவிக்க உள்ளார். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவமனை கட்டிடங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு, வளாகம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. இதற்கிடையில், மதுரையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மகாத்மா காந்தி அருங்காட்சியகத்திலும் சீரமைப்புப் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அருங்காட்சியகம் திறப்பு விழாவுக்கு தயாராகியுள்ளது. விஜய் அங்கு சென்று பார்வையிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
இதையொட்டி அங்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன்பிறகு அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்கி விஜய் சிறிது நேரம் ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மாலை 4 மணிக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விஜய் தரிசனம் செய்ய உள்ளார். கோவில் கும்பாபிஷேகம் கடந்த 17-ந்தேதி நடைபெற்ற நிலையில், அதன்பிறகு முதல்-அமைச்சர் அங்கு சென்று தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக முதல்-அமைச்சர் ஒருவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல உள்ளார். முதல்-அமைச்சரின் மதுரை வருகையையொட்டி நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து அரசு மருத்துவமனை மற்றும் காந்தி அருங்காட்சியகம் செல்லும் வழித்தடங்களில் சாலையின் இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்ட தொடக்க விழா மற்றும் காந்தி அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் பார்வையிடும் நிகழ்ச்சி ஆகிய இரண்டும் மட்டுமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.