ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக நிகழ்வாகத் தொடங்கியது. தொடர்ந்து நேற்று அரசியல் விழா நடைபெற்றது. பசும்பொன்னில் நடைபெறும் இந்த விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் மரியாதை செலுத்தினார்.
Advertisement
பசும்பொன்னில் நிகழ்ச்சிகளை நிறைவு செய்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்திற்குப் புறப்பட்டார். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.இதனைத் தொடர்ந்து மதுரைக்கு வரும் அவர், மாலை 4 மணியளவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர் மாலை 5 மணிக்குப் பிறகு மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்குப் புறப்படுகிறார். துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.