தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. சதி - ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு
தெலுங்கானா மாநிலம் கோடங்கல் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறுகையில், பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மத்திய அரசு வாக்குகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். மராட்டியம், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தத்தை பயன்படுத்தி வாக்குகளை நீக்கியதன் மூலம் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.அதே நடைமுறையை தெலுங்கானாவிலும் பின்பற்ற பா.ஜ.க. முயற்சிப்பதாக ரேவந்த் ரெட்டி கூறினார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் பெயரில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ள பட்டியல் இனத்தினர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை நீக்குவதற்கு குறிவைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.காங்கிரஸ் ஆதரவு வாக்குகளை நீக்கும் முயற்சியை கட்சி அமைதியாக வேடிக்கை பார்க்காது என்றும், அதற்கு எதிராக வலுவாக குரல் கொடுக்கும் என்றும் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.மேலும், அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்திய பா.ஜ.க., தற்போது ஏழை மக்களின் வாக்குகளை நீக்குவதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.