Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

திரைத்துறையில் இயக்குநராக 20 ஆண்டுகள் நிறைவு: வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவு

திரைத்துறையில் இயக்குநராக 20 ஆண்டுகள் நிறைவு: வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவு
இயக்குநர் வெங்கட் பிரபு திரையுலகில் இயக்குநராக தனது 20 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி, தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவர் சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.வெங்கட் பிரபு 2007-ம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார். தொடர்ந்து ‘சரோஜா’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘மாநாடு’, ‘கோட்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.இயக்குநராக வருவதற்கு முன்பு கதாநாயகனாக அறிமுகமாக முயன்ற வெங்கட் பிரபு, அந்தப் படம் வெளியாகாத நிலையில் பின்னர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பிறகே இயக்குநர் அவதாரம் எடுத்தார்.‘சென்னை 28’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தனது இயக்குநர் பயணத்தின் 20-வது ஆண்டில் வெங்கட் பிரபு அடியெடுத்து வைக்கிறார். இதனை நினைவுகூரும் வகையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது திரைப்பயணம் தொடங்கிய தருணம் முதல் இதுவரை கிடைத்த ஆதரவு குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ‘சென்னை 28’ படத்தின் மூலம் இயக்குநராக தனது பயணம் தொடங்கியதாக தெரிவித்துள்ள அவர், எஸ்பிபி சாரின் ஆசீர்வாதமும், தனது சகோதரர் சரண் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அந்த வாய்ப்பை சாத்தியமாக்கியதாகக் கூறியுள்ளார். அந்த ஒரு வாய்ப்பு தனது வாழ்க்கையையே மாற்றியமைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தனது ஒவ்வொரு திரைப்படத்தையும் வித்தியாசமான முயற்சியாக உருவாக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருந்ததாகவும் வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார். புதிய வகை, புதிய கதை சொல்லும் அணுகுமுறை மற்றும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்பாக ஒவ்வொரு படத்தையும் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.சில திரைப்படங்களுக்கு உடனடியாக ரசிகர்களின் வரவேற்பு கிடைத்ததாகவும், சில படங்கள் காலப்போக்கில் ரசிக்கப்பட்டதாகவும், இன்னும் சில படங்கள் தனக்கு முக்கியமான பாடங்களை கற்றுக்கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.தொடர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான தைரியத்தை ரசிகர்களின் அன்பும் நம்பிக்கையுமே அளித்ததாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
Advertisement
தனது வெற்றிகளை ரசிகர்கள் கொண்டாடியதுடன், சவாலான காலகட்டங்களிலும் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும், ஒவ்வொரு புதிய படத்தையும் அதே அன்புடன் வரவேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தன்னை நம்பிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடக நண்பர்கள், நண்பர்கள் என தனது 20 ஆண்டுகால பயணத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். சினிமாவை கொண்டாடும் ரசிகர்களுக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.20 ஆண்டுகள் கடந்த பிறகும் தான் சினிமாவின் தீவிர ரசிகராகவே இருப்பதாக கூறியுள்ள வெங்கட் பிரபு, ஒவ்வொரு திரைப்படமும் தனக்கு புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொடுப்பதாக தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின் முதல் நாளுக்கு முன்பு ஏற்படும் பதற்றமும் எதிர்பார்ப்பும் இன்றும் மாறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.மக்களை மகிழ்விக்கும், வியப்பில் ஆழ்த்தும், அவர்களுடன் ஒன்றிப்போகும் கதைகளை தொடர்ந்து சொல்ல வேண்டும் என்ற தனது விருப்பம் மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே ஆர்வத்துடன் இனியும் நல்ல கதைகளை ரசிகர்களுக்கு வழங்குவேன் என்று உறுதியளித்துள்ள அவர், இன்னும் பல ஆண்டுகள் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.வெங்கட் பிரபுவின் இந்த நெகிழ்ச்சியான பதிவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தனது வழக்கமான பாணியில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு