திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், தொல்லியல் துறையின் அனுமதி பெற்ற பின்னரே மலைக்குச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ததில் 5 ஏக்கர் அளவுக்கு வித்தியாசம் இருப்பதாகவும், இதனால் மீண்டும் அளவீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்த விவகாரத்தில் அறநிலையத்துறையின் கருத்தையும் தெரிவிக்கும் வகையில் கூடுதல் மனு தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்திருந்தனர். இந்நிலையில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
அந்த மனுவில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை எதிர்த்தரப்பாக சேர்க்கப்படவில்லை என்றும், திருப்பரங்குன்றம் மலையின் நில அளவை தொடர்பாக தங்களுக்கு எந்தவித நோட்டீசும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலையின் நிர்வாகத்தில் அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களின் கருத்துகளை கேட்காமல் மலையை அளவீடு செய்ய அனுமதிப்பது கோவிலின் உரிமையை பாதிக்கும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. சுமார் 172 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் தொல்லியல் நினைவுச்சின்னம் என்ற அடிப்படையில் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டிருப்பது, மலையின் பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவற்றுக்கு முரணானது என்றும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலையைப் பொறுத்தவரை மத்திய தொல்லியல் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து தரப்பினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்றும், எனவே மலையை அளவீடு செய்ய பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்றும் இடையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு மனுதாரர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை அக்டோபர் 2-வது வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.