நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள காடந்தேத்தி கிராமத்தில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் பா.ஜ.க.வில் இணைந்த சிலரை ஊர் மக்கள் ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறி, தலைஞாயிறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காடந்தேத்தி கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் திமுக ஆதரவாளர்களாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்த சிலர் திமுகவில் இருந்து விலகி தவெக மற்றும் பா.ஜ.க.வில் இணைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, தங்களை பெரும்பான்மையான கட்சியினர் சமூக ரீதியாக ஒதுக்கி வருவதாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தரப்பினர் தெரிவித்துள்ளனர். தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்வுகளில் மற்றவர்கள் கலந்து கொள்வதில்லை என்றும், தங்கள் நிகழ்ச்சிகளில் பிறரை பங்கேற்கவும் அனுமதிப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், காடந்தேத்தி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் தங்களை புறக்கணிப்பதாகக் கூறி தலைஞாயிறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Advertisement
எனினும், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில், நடைபெற உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் தங்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஊர் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளிலும் தங்களை பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவிலும் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, தங்கள் தரப்பில் யாருக்கும் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும், அவர்களாகவே ஒதுங்கிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், கோவில் நிர்வாகக் குழுவில் அவர்களது தரப்பைச் சேர்ந்த 4 பேர் இடம்பெற்றுள்ளதாகவும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் காரணமாகவே கோவில் கும்பாபிஷேகத்தை தடுக்க முயற்சிப்பதாக தங்கள் மீது குற்றம்சாட்டப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.