கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அருள் விக்னேஷ். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, நேற்று தவெக சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்த முதல்-அமைச்சர் விஜய், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு யாரேனும் இடையூறு ஏற்படுத்துவது தெரியவந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி திரிசூலி, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அருள் விக்னேஷ் மீது தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement
இந்நிலையில், அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை பனகல் மாளிகை அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, "குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைப் பாதுகாப்பது ஆட்சிக்கு அழகல்ல; பெண்களையும் குழந்தைகளையும் ஏமாற்றாதே. பாலியல் குற்றவாளிகளுக்கு எந்தச் சூழலிலும் பாதுகாப்பு அளிக்கக் கூடாது" எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்த விவகாரத்தை ஏன் மறைக்க முயற்சிக்கிறீர்கள்? அருள் விக்னேஷை ஏன் பாதுகாக்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.