அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா என்பது குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் விஜய் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தவெக அரசு பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், தமிழக அரசு கும்பகர்ணனைப் போல ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகவும், பலமுறை எச்சரித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்தார்.
Advertisement
அரசின் செயலற்ற தன்மையால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக செங்கோட்டையன் தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து என்றார். மேலும், சில முக்கியமான விஷயங்களைப் பொதுவெளியில் வெளிப்படையாகப் பேச முடியாது என்றும், அத்தகைய சூழல் உருவானால் அனைத்து ஊடக நண்பர்களையும் அழைத்து உரிய தகவல்களைத் தெரிவிப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.