Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது – கனிமொழி

த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது – கனிமொழி
தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக வெற்றிக் கழக அரசு நடத்தும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மத்திய ஜல் சக்தி அமைச்சரை நேரில் சந்தித்து வழங்க தமிழக அரசு பிரதிநிதிகளை அனுப்பத் தயாராக உள்ளதா என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து முதலில் எச்சரித்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி, மாநிலத்தின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றியதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை சென்னைக்கு அழைத்து, நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டமும் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதையும் ஒருங்கிணைத்ததாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. இது தொடர்பான சட்டமுன்வரைவை கொண்டு வந்தபோதும், சட்டமன்றத் தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு இடையே அதற்கு எதிராக தி.மு.க. போராடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக்கொடி ஏற்றி, சட்டவரைவு நகலை எரித்து எதிர்ப்பு தெரிவித்ததுடன், நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேறாமல் தடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற இருப்பதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு குறித்த தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில், புதிதாக விவாதிக்க வேண்டிய விஷயம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.ஏற்கனவே நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்ற 2000-ம் ஆண்டு மத்திய அரசின் உறுதியைத் தொடர வேண்டும் என்றும், 2026-ம் ஆண்டுக்குப் பிறகும் மேலும் 30 ஆண்டுகளுக்கு அதே நடைமுறை நீடிக்கும் என மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்குத் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்போது இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே உள்ள தொகுதி விகிதம் எந்த அளவில் உள்ளதோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும், தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 சதவீத பிரதிநிதித்துவம் எந்த காரணத்தாலும் குறையக் கூடாது என்பதே தி.மு.க.
Advertisement
உள்ளிட்ட தமிழக கட்சிகளின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறைக்கு தமிழ்நாடு எதிரானது அல்ல என்றாலும், கடந்த 50 ஆண்டுகளாக சமூக மற்றும் பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்கான தண்டனையாக அது அமைந்துவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.இந்த நிலைப்பாட்டில் தி.மு.க. தொடர்ந்து உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள கனிமொழி, ஏற்கனவே நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொண்ட காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய முஸ்லீம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் இதே நிலைப்பாட்டிலேயே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அப்படியிருக்கும்போது, மீண்டும் இதற்காக ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, மாநிலத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறையை தி.மு.க. உறுதியாகஎதிர்க்கும்என்றும்,இந்தநிலைப்பாட்டில்எந்தமாற்றமும்இல்லைஎன்றும்கனிமொழிதெரிவித்துள்ளார்.இதனிடையே, காவிரி பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்தக் கூட்டத்தை நடத்தாமல் தமிழக வெற்றிக் கழக அரசு மவுனமாக இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.யாரும் கோரிக்கை விடுக்காத நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து அவசரமாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் அரசியல் நடவடிக்கையாகவே இருப்பதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்க வேண்டுமெனில், அதற்கு முன்பாக மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் ஏற்கனவே அறிக்கை மூலம் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை ஏற்காத தமிழக வெற்றிக் கழக அரசின் இன்றைய கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது என்று கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் காவிரி உரிமை மற்றும் டெல்டா விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மத்திய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்க தமிழக அரசின் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதற்காக தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு