சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், தவெக அரசு மற்றும் முதல்-அமைச்சர் விஜய் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜயின் பேச்சால் அவையின் மாண்பு தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளதாக மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், தொடர்பில்லாத விஷயங்களை பேசி விவாதத்தை திசைதிருப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தவெக அரசு பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் சட்டம்-ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள், மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, ஆவின் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மின்வெட்டு காரணமாக மாணவர்கள் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பும்போது காற்று இல்லாதது, மழை பெய்யாதது போன்ற காரணங்கள் தெரிவிக்கப்படுவதாகவும் மேயர் பிரியா ராஜன் விமர்சித்தார். இதுபோன்ற செயல்பாடுகளால் தமிழகம் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஐடி பூங்காக்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டமும் கைவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். “கையில் இருப்பதை விட்டுவிட்டு கிடைக்காததை நாடினால், இருப்பதும் இல்லாமல் போய்விடும்” என்ற கருத்தை முன்வைத்தார்.
Advertisement
மேலும், சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற பல நடவடிக்கைகள் தமிழகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய அவர், இதனை கண்டிக்கத்தக்கது என்றார். மீனம்பாக்கம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைப்பது எந்த வகையில் நியாயம் என்றும் மேயர் பிரியா ராஜன் கேள்வி எழுப்பினார். நிறைவடைந்த திட்டங்களை விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து, திமுக எந்த காலகட்டத்திலும் எந்த சூழலிலும் கொள்கையில் உறுதியாக இருப்பதாகக் கூறிய அவர், தொடர்ந்து போராடி தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்திற்கு திமுகவின் தேவை எப்போதும் இருக்கும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து, தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்தை சுட்டிக்காட்டி மேயர் பிரியா ராஜன் பேசினார். அப்போது, “தலைமை என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளாமல், கொள்கையை அறியாமல், வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பிரச்சினைகள் ஏற்படும் நேரத்தில் எதிரணியினர் மீது பழியை சுமத்துவது தலைமைப் பண்புக்கான தகுதி கிடையாது. அது ஏமாற்று வேலை” என்று அவர் தெரிவித்தார்.