தர்மேந்திர பிரதான் ராஜினாமா: “கரப்பான் பூச்சியைக் கூட சீண்டாதீர்கள்” - கொண்டாட்டத்தில் சி.ஜே.பி. கட்சியினர்
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் சர்ச்சை நீடித்து வரும் நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது. அந்த சம்பவத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் கவனம் பெற்றது.இன்று அந்த போராட்டம் 36-வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வினாத்தாள் கசிவு வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கும் நோக்கில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார்.இதற்கிடையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசுக்கும் நேற்று டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த சந்திப்பில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் பங்கேற்றனர்.இந்த சூழலில், இன்று (சனிக்கிழமை) மத்திய கல்வி மந்திரி பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில், கடந்த 10 நாட்களாக நடந்த சம்பவங்கள் தனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மாணவர்களை தவறாக வழிநடத்தும் வகையில் செயல்பட்டதாகவும், அது மிகவும் வருத்தமளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தியாவின் உண்மையான பலம் இளைஞர்களே என்றும், அவர்கள் குழப்பத்தில் சிக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.