தமிழ்நாட்டில் கோடை காலங்களில் மின்சார பயன்பாடு வழக்கமாக அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி மாநிலத்தின் மின்தேவை இதுவரை இல்லாத அளவாக **21,211 மெகாவாட்** என்ற புதிய உச்சத்தை எட்டியது. பொதுவாக கோடை முடிந்து ஜூலை மாதத்தில் வெப்பம் குறையத் தொடங்கும்போது மின்தேவையும் படிப்படியாக குறையும். ஆனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருவதால் நிலைமை மாறியுள்ளது. இதன் காரணமாக, ஜூலை 14-ஆம் தேதி தமிழகத்தின் மின்தேவை **21,724 மெகாவாட்** ஆக உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை பதிவு செய்தது. மேலும், வழக்கமாக மாலை நேரங்களில் தினசரி சராசரி மின்தேவை 20 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருந்த நிலையில், இந்த மாதத்தில் அது 21 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தொடரும் மின்தேவை அதிகரிப்பு மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மின்வாரியத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சென்னை புறநகர் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் முன் அறிவிப்பின்றி தினமும் சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் இந்த சூழலில், தமிழ்நாட்டில் திடீரென மின்வெட்டு ஏற்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் ஏற்பட்ட தடையால் இரண்டு நாட்களுக்கு மின்சார பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டுமின்றி, பெரும்பாலான மாநிலங்களிலும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய நேற்று மாலை பொது மின்சார விநியோகத்தில் இருந்து தேவையான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், அதன்பிறகு அனைத்து பகுதிகளிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.