தமிழ்நாட்டின் நலனுக்கே மேகதாது அணை: டி.கே.சிவக்குமார்
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:நாடாளுமன்ற தொகுதிகளின் மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவமும், குரலும் குறையும் என்பதால் இந்த நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம்.தமிழ்நாட்டின் நலன் மற்றும் பெங்களூருவின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மேகதாதுவில் புதிய அணை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அங்கு சேமிக்கப்படும் நீரில் 95 சதவீதம் தமிழகத்துக்கே பயன்படும்.மேகதாது அணை தமிழகத்துக்குத்தான் நன்மை அளிக்கும் என்பதை முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீர் தொடர்ந்து வழங்கப்படும்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் மதிப்போம்.மேலும், 10 ஆயிரம் ‘பாரத் ஜோடோ’ குழுக்களை உருவாக்கி, இளைஞர்களை விளையாட்டு, கலாசாரம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் இருப்பதற்காக அவர்களுக்கு குடியிருப்பு சான்றிதழ்களை வழங்கி வருகிறோம்.2028-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதன்பிறகு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெறும்.இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.