சிறையிலிருந்து தப்பிய கைதி... ஆதார் அட்டை கேட்டு மீண்டும் போலீஸ் நிலையத்துக்கே வந்த விநோதம்!
கேரள மாநிலம் கொச்சியில் சிறையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி ஒருவர், தனது ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ள தான் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கே மீண்டும் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அசாம் மாநிலம் தேமாஜி பகுதியைச் சேர்ந்த மதுர்ஜ்யா சோனாவால் (28), எர்ணாகுளம் மாவட்டம் எடத்தலா பகுதியில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களின் செல்போன்களை திருடியதாக கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் துணைச் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், மறுநாள் மாலை சுமார் 4 மணியளவில் கைதிகளுக்கு வழங்கப்பட்ட வழக்கமான ஓய்வு நேரத்தை பயன்படுத்தி சோனாவால் சிறையில் இருந்து தப்பியுள்ளார். சமையலறை வழியாகச் சென்று சுற்றுச்சுவரில் ஏறி அவர் வெளியேறியதாக கூறப்படுகிறது. கைதிகளை மீண்டும் அறைகளுக்குள் அனுப்புவதற்கு முன்பு நடத்தப்பட்ட எண்ணிக்கையின்போதுதான் அவர் காணாமல் போனது சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.இதையடுத்து அருகிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சோனாவாலை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.ஆனால், சிறையில் இருந்து தப்பிய சோனாவால் வேறு எங்கும் செல்லாமல், தன்னை கைது செய்த காவல் நிலையத்திற்கே திரும்பிச் சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த போலீஸ்காரரிடம் தனது ஆதார் அட்டையை கேட்டுள்ளார்.தன்னை முன்பு கைது செய்த போலீசார் அந்த நேரத்தில் பணியில் இருக்க மாட்டார்கள் என்றும், தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது என்றும் அவர் கருதியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் காவல் நிலையத்தில் இருந்த போலீஸ்காரராலும் சோனாவாலை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.அப்போது, தப்பிய கைதியை பிடிப்பதற்காக வெளியிடப்பட்ட எச்சரிக்கை தகவலை ஏற்கெனவே பார்த்திருந்த மற்றொரு போலீஸ்காரர், அங்கிருந்த சோனாவாலை அடையாளம் கண்டுள்ளார். இதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த அவர், காவல் நிலையத்தில் இருந்து மீண்டும் தப்பியோடியுள்ளார்.தப்பிய கைதியை பிடிக்க போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். சிறையில் இருந்து தப்பிய பிறகும் தனது ஆதார் அட்டையை பெறுவதற்காக அவர் மீண்டும் அதே காவல் நிலையத்திற்கே சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.