Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

தமிழகத்தில் துவரம் பருப்பு, உளுந்து இருப்புக்கு புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழகத்தில் துவரம் பருப்பு, உளுந்து இருப்புக்கு புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழகத்தில் துவரம் பருப்பு மற்றும் உளுந்து விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் இருப்புக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் குறிப்பிட்ட அளவைத் தாண்டி பருப்பு வகைகளை இருப்பு வைக்க முடியாது. தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களின் குடும்பச் செலவுகளை அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மாநிலத்தின் சில்லறை பணவீக்கம் 6.81 சதவீதமாக பதிவானது. இதன் மூலம் நாட்டிலேயே அதிக சில்லறை பணவீக்கம் கொண்ட மாநிலமாக தமிழகம் இருந்தது. குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலை உயர்வு 10.62 சதவீதத்தை எட்டியது. இதில் பருப்பு வகைகளின் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பு சராசரியாக ரூ.134.23-க்கு விற்பனையானது. ஆனால், அப்போது நாட்டின் சராசரி விலை ரூ.124.41 மட்டுமே. அதாவது, தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழகத்தில் கிலோவுக்கு ரூ.9.82 அதிகமாக இருந்தது. அக்டோபர் மாதத்தில் துவரம் பருப்பு கிலோ ரூ.143-க்கும், உளுந்து ரூ.128-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் சில்லறை சந்தையில் துவரம் பருப்பு கிலோ ரூ.153.43 ஆகவும், உளுந்து ரூ.139.67 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்புக்கு வரம்பு விதிக்க கோரிக்கை பருப்பு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதுடன், வியாபாரிகள் அதிக அளவில் பொருட்களை வாங்கி சேமித்து வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக துவரம் பருப்பு, உளுந்து, அரிசி, சமையல் எண்ணெய், வெங்காயம் ஆகியவற்றின் இருப்புக்கு வரம்பு நிர்ணயிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஆய்வு செய்த மத்திய நுகர்வோர் விவகாரத்துறை, தற்போது துவரம் பருப்பு மற்றும் உளுந்துக்கு மட்டும் இருப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.மொத்த, சில்லறை விற்பனையாளர்களுக்கு கட்டுப்பாடு புதிய விதிகளின்படி, மொத்த விற்பனையாளர்கள் துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்றில் ஒவ்வொரு வகையிலும் அதிகபட்சமாக 200 டன் வரை மட்டுமே இருப்பு வைத்திருக்கலாம்.

Advertisement
அதேபோல், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொரு வகை பருப்பையும் தலா 5 டன் வரை மட்டுமே சேமித்து வைக்க அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் சந்தையில் பருப்பு வகைகளை அதிக அளவில் வாங்கி பதுக்குவதையும், அதன் காரணமாக ஏற்படும் செயற்கையான விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருப்பு ஆலைகளுக்கு தனி விதிமுறை பருப்பு ஆலைகளுக்கு அவற்றின் செயலாக்கத் திறனை அடிப்படையாகக் கொண்டு இருப்பு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களின் சராசரி செயலாக்க அளவு அல்லது ஆண்டு செயலாக்கத் திறனில் 25 சதவீதம் ஆகிய இரண்டில் எது அதிகமோ, அந்த அளவுக்கு பருப்புகளை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதனால் ஆலைகளின் வழக்கமான உற்பத்திப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுடன், தேவைக்கு அதிகமாக பருப்புகளைச் சேமிப்பதையும் கட்டுப்படுத்த முடியும். இறக்குமதி நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடு வெளிநாடுகளில் இருந்து துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள் நாட்டை வந்தடைந்த பின்னர், அவற்றை 45 நாட்களுக்கு மேல் இருப்பு வைத்திருக்க அனுமதி இல்லை. இதன் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகளை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து சந்தையில் தட்டுப்பாட்டை உருவாக்குவதையும், விலையை உயர்த்துவதையும் தடுக்க முடியும் என கருதப்படுகிறது. அரிசி, எண்ணெய், வெங்காயத்துக்கு அனுமதி இல்லை துவரம் பருப்பு, உளுந்து மட்டுமின்றி அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் வெங்காயத்துக்கும் இருப்பு வரம்பு விதிக்க தமிழக அரசு அனுமதி கேட்டிருந்தது. ஆனால், வெங்காயத்தின் விலை தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது குறைந்து வருவதால், அதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டிய தேவை இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அரிசி மற்றும் சமையல் எண்ணெய்க்கு இருப்பு வரம்பு நிர்ணயிப்பதற்கும் மத்திய அரசு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் தமிழகத்தில் துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகிய இரண்டு பொருட்களுக்கு மட்டுமே புதிய இருப்புக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு