தமிழகத்தில் உற்சாகமாக தொடங்கிய 18-வது ஈஷா கிராமோத்சவப் போட்டிகள்
சத்குருவின் ஈஷா அறக்கட்டளை ஆண்டுதோறும் நடத்தி வரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 18-வது ஈஷா கிராமோத்சவத்தின் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள், ஆகஸ்ட் 1, 2026 அன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமான சூழலில் தொடங்கின. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு தொடங்கி வைத்தார்.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் முக்கிய பிரமுகர்கள் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். உடுமலைப்பேட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி, பூந்தமல்லியில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். ஹரீஷ், மதுரை கோச்சடையில் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். தங்கபாண்டி, ஆற்காட்டில் ராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. தாஹிரா, ஓமலூரில் ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். மணி, முசிறியில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி. விக்னேஷ் மற்றும் திருத்தணியில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சுபம் திமான், ஐ.பி.எஸ். ஆகியோர் வீரர்களை வாழ்த்தி போட்டிகளைத் தொடங்கிவைத்தனர். இதனுடன் பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.இந்த கிராமோத்சவத்தில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்), பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்படுகின்றன. 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம். தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.தமிழ்நாட்டில் 70-க்கும் அதிகமான மையங்களில் கிளஸ்டர் சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அவற்றில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி போட்டிகள் நடைபெற்றன. மீதமுள்ள 30-க்கும் மேற்பட்ட மையங்களில் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.வாலிபால் பிரிவில் 2,400 அணிகளைச் சேர்ந்த 24,000 வீரர்களும், த்ரோபால் பிரிவில் 31 மையங்களில் 620 அணிகளைச் சேர்ந்த 6,200 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 45 அணிகள் விளையாட உள்ள நிலையில், இந்த முதற்கட்ட சுற்றில் மட்டும் சுமார் 30 ஆயிரம் கிராமப்புற வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கிளஸ்டர் சுற்றைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தின் 3 மற்றும் 4-வது வார இறுதிகளில் மண்டல (டிவிஷனல்) போட்டிகள் நடைபெறவுள்ளன.