தமிழகத்தில் நடப்பாண்டில் எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவு இல்லாததால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, கடந்த ஆண்டைக் காட்டிலும் யூரியா, டி.ஏ.பி. உள்ளிட்ட உரங்களின் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளதாக உர விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உர விநியோகஸ்தர்கள் கூறியதாவது: மேற்காசியாவில் ஏற்பட்ட போர் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் எதிர்காலத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் தேவைக்கு அதிகமாக உரங்களை வாங்கி இருப்பு வைத்தனர். இதற்கிடையே, தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததுடன், காவிரி ஆற்றிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் குறுவை நெல் சாகுபடி பாதிப்புக்குள்ளானது.
Advertisement
இதனால் உரங்களுக்கான தேவை குறைந்தது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக மழை பெய்யும் என்பதால், இந்த காலகட்டத்தில் உர விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்திருந்தாலும், எதிர்பார்த்த அளவிலான மழை கிடைக்கவில்லை. தற்போது ஒவ்வொரு உர விநியோகஸ்தரிடமும் வழக்கத்தை விட 10 முதல் 20 சதவீதம் வரை கூடுதலாக உரங்கள் இருப்பில் உள்ளன. இதனால் துறைமுகங்களிலும் லட்சக்கணக்கான டன் உரங்கள் தேங்கியுள்ளன. விற்பனை மந்தமானதால் உர உற்பத்தி நிறுவனங்களும் தங்களது உற்பத்தி அளவைக் குறைத்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் உர விற்பனை 40 சதவீதம் சரிந்துள்ளது. இனிவரும் நாட்களில் கணிசமான மழைப்பொழிவு இருந்தால் மட்டுமே உரங்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.