தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல்; சட்டசபை கூடும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
17-வது தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த த.வெ.க. அரசின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விவாதம் நடைபெற்றது. கூட்டத்தொடரின் இறுதி நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார்.நான்கு நாட்கள் நடைபெற்ற அந்த கூட்டத்தொடர் பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டசபை மீண்டும் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில், தமிழக சட்டசபை அடுத்த மாதம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மீண்டும் கூடும் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு 2026-27-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும், பட்ஜெட் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து, அதிலுள்ள முக்கிய அம்சங்களை விளக்கவுள்ளார்.