தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டத்தில், அரசின் முக்கியத் திட்டங்கள், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது மற்றும் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடர்பான முடிவுகள், அரசு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அரசுத் துறைகளின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளன. தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டமான ‘வெற்றி தமிழகம்’ திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் கூட்டத்தில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை, இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசிக்க உள்ளனர். ‘வெற்றி தமிழகம்’ திட்டத்தில் மொத்தம் 436 திட்டங்களும் இலக்குகளும் இடம்பெற்றுள்ளன.
Advertisement
இவற்றைச் செயல்படுத்துவதற்கான கொள்கை முடிவுகள், பல்வேறு அரசுத் துறைகளின் பங்களிப்பு மற்றும் திட்டங்களை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான விவகாரமும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதற்கு மீனவர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விதி 110-ன் கீழ் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அமைச்சரவை ஆய்வு செய்ய உள்ளது. அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை, அவற்றுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எட்டப்பட்டுள்ளனவா என்பது உள்ளிட்ட அம்சங்கள் பரிசீலிக்கப்பட உள்ளன. அரசின் அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதுடன், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.