நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பட்டாசு வெடிப்பால் ஏற்பட்ட காற்று மாசுபாடு பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. வட இந்தியாவில் ஆண்டுதோறும் தீபாவளியின்போது காற்று மாசுபாடு அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில், டெல்லியில் நிலவும் குளிர்காலச் சூழல், விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதால் உருவாகும் புகை மற்றும் தீபாவளி பட்டாசுகளின் புகை ஆகியவை ஒன்றிணைந்து காற்றின் தரத்தை வெகுவாகப் பாதித்துள்ளன.
Advertisement
இதன் காரணமாக, டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) பல்வேறு இடங்களில் 380 முதல் 444 வரை உயர்ந்து, 'மிக மோசம்' மற்றும் 'ஆபத்தான' நிலையை எட்டியுள்ளது. பல பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு பசுமைப் பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.