நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இணையும் புதிய படமான ‘தனுஷ் 56’ படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். ‘கட்சி சேரா’, ‘ஆச கூட’ உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாய் அபயங்கர். இவரது பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, திரைப்படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கத் தொடங்கின. சாய் அபயங்கர் இசையமைத்த முதல் திரைப்படமாக ‘டியூட்’ வெளியானது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ‘மார்ஷல்’, அட்லி இயக்கும் ‘ராக்கா’, பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’, தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
Advertisement
இதற்கிடையில், சாய் அபயங்கரின் 6-வது இன்டீ பாடலான ‘ராதிமா’ சமீபத்தில் வெளியானது. இந்த இசை ஆல்பத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சாய் அபயங்கருடன் இணைந்து நடனமாடியுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மம்முட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சாய் அபயங்கர் இசையமைத்த ‘அலேக்கா லோவா’ பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தனுஷ் - தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் ‘தனுஷ் 56’ படத்திற்கும் தாம் இசையமைக்க உள்ளதாக சாய் அபயங்கர் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.