தூத்துக்குடி: வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை திருட்டு- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி அருகே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 4 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளியை தேடி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள நடுக்கூட்டன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கல்யாணி (61). கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி இரவு, வீட்டில் காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்திருந்தனர். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கியுள்ளனர்.நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 4 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.இந்த திருட்டு சம்பவம் குறித்து கல்யாணிக்கு ஆகஸ்ட் 26-ம் தேதிதான் தெரியவந்துள்ளது.