நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீண்ட தலைமுடி, தாடி, கையில் துப்பாக்கி என வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சூர்யாவின் 47-வது படமாக உருவாகும் இப்படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார். ‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் இயக்கும் இப்படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கிறார். சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பிலும் இப்படம் தயாரிக்கப்படுகிறது.
Advertisement
இப்படத்தில் சூர்யா, டிஎஸ்பி இன்பராஜ் என்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். வழக்கமான போலீஸ் கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு, விசித்திரமான குணங்களும் அதிரடியான செயல்பாடுகளும் கொண்டவராக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடைந்து சிதறிய பொருட்கள் நிறைந்த அறையில் மர நாற்காலியில் அமர்ந்திருக்கும் சூர்யா, கையில் துப்பாக்கியுடன் தீவிரமான பார்வையில் காட்சியளிக்கிறார். அவரது முரட்டுத்தனமான தோற்றம் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 25 நாட்களே உள்ளதாகப் படக்குழு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘சீன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.