தங்கச் சுரங்கம் இடிந்து பயங்கர விபத்து: 30 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததில் சுமார் 30 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
நானா-மாம்பேரே மாகாணத்தின் அப்பா பிராந்தியத்தில் இந்த தங்கச் சுரங்கம் அமைந்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததில் சுரங்கம் முழுமையாக இடிந்து விபத்து ஏற்பட்டது.இந்த கோர விபத்தில் 30 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்களின் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.இடிபாடுகளில் இருந்து உயிரிழந்த 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால், மீட்புக் குழுவினரும் உள்ளூர் மக்களும் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல் பாரம்பரிய முறையில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டினர். மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உரிய உரிமம் இல்லாமல் ஆபத்தான முறையில் செயல்படும் சுரங்கங்களில் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.