காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசிக்க, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 58-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. எஸ்.கே. ஹல்தர் தலைமையில் பிற்பகலில் நடைபெறும் இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகா திறந்துவிடுவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையமும் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு குறித்து கர்நாடகாவுக்கு உத்தரவிட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது.
Advertisement
தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி நடைபெற்ற 57-வது கூட்டத்தில், அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கனஅடி என்ற அளவில் மொத்தம் 7.776 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், 58-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. செப்டம்பர் 25-ம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய காவிரி நீரின் அளவு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட உள்ளது. காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுத்து வரும் நிலையில், இதற்கு தமிழக அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.